Monday, February 28, 2011

அன்றும் இன்றும்!

அன்று...
வீட்டில் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியில்
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி..
இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்
இது தான் சமயம் என்று, அம்மா,
ஒரு தோசை கேட்டவனுக்கு ரெண்டு வைத்து விட்டு போனாள்..
நான் திரும்பி பார்த்த போது,
'சும்மா சாப்பிடு டா! வளர்ற பிள்ள தானே!' என்று கொஞ்சினாள்.

இன்று..
ஹோட்டல்-இல் LCD டிவியில் 
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி
வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்
எனக்குப் போட்டியாக waiter உம் பார்த்தான்
விளைவு.. கேசரி மீது சட்னி அபிஷேகம்!
இருவரும் உணர்ந்த போது
'சாரி சார்' என்று தலையை சொரிந்தான்..

வேடிக்கை என்னவென்றால்..
அன்று அம்மாவிடம், 
'ஏம்மா இப்படி பண்ணினீங்க' என்று கோபப்பட்டேன்
இன்று இவனிடம், 
'இல்ல.. பரவாயில்லைங்க' என்று ஆறுதல் கூறுகிறேன்..

இப்போது அந்த கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி
தந்த அற்புத வண்ணங்களை இழந்து
மனம் ஏனோ ஏங்குகிறது..

Sunday, February 13, 2011

காதல் பரிசு


காதலர் தினப் பரிசாகப் பூக்கள் கேட்டாய்
பூக்களைத் தேடி கடை வீதியில் நான்!
சில மணி நேர தேடுதலுக்குப் பின்
வெறுங்கையுடன் வீடு திரும்பினேன்!
வண்ணமிகு வாசமிகு மலர்கள்
வாடி விடும் என்றனர்
வாடாத காகிதப் பூக்கள்
என் காதலின் மணம் தரவில்லை!

முடிவில், இதோ தொடங்கி விட்டேன்
உனக்குப் பரிசாக - என் 

எண்ணங்களின் வகை வகையான வண்ணங்களையும்,
வார்த்தைகளின் மிகை மிகையான வாசங்களையும்,
என்றும் வாடாத என் காதலையும் - சுமந்த
கவிதைப் பூக்களைத் தொடுக்க..