Saturday, November 27, 2010

இம்சை அரசி

விடையும் தெரியாமல் 
விடவும் முடியாமல் 
திணற வைக்கும்
விந்தையான விடுகதை நீ!

என் உள்ளம் உடைந்தால்தான் உன்னை அழைப்பேன்
என்று நீ நினைத்த போது தான்
என் உலகம் உடைந்தது;
கண்கள் கலங்கியது

நம்பினால் தான் நட்பும் காதலும்!
நான் உன்னை நம்பவில்லை
என்று நீ நினைத்தாய் -
என் மீது உனக்கு நம்பிக்கை இல்லாததால்!

இடைவிடா இம்சைகளுக்கும்,
மலிவான மிரட்டல்களுக்கும்,
குழப்பமான கேள்விகளுக்கும்
என் நாகரீக நன்றிகள்!!

Friday, November 26, 2010

அர்த்தம் புரிந்தது!!

அர்த்தமற்ற என் எழுத்துக்கள்  
தமிழில் இருப்பதால் 
அர்த்தம் புரியவில்லை அவளுக்கு;
" 'மொழிபெயர்த்துச் சொல்' என்று
என்னிடம் கேட்க எண்ணியவள்,
'அர்த்தம் (ஏதேனும் இருப்பின்,
அதை) இழக்க நேரிடும்' 
என்பதால் கேட்கவில்லையாம்" -
என்னிடம் கூறி நகைத்தாள்!
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அடக்கம் - 
அவளின் அந்தப் புன்னகையில்...

Sunday, August 01, 2010

5star Friends!


குணத்தால்
இனத்தால்
மொழியால்
வழியால்
வேறுபட்டாலும்
உள்ளத்தால் ஒன்றானோம் -
நட்பென்னும் கரத்தினில்
ஐந்து விரல்களாய் நாம்!

--
"நட்பினைப் போற்றுவோம்,
நட்போடு வாழுவோம்!"
Happy Friendship Day!
--Siva--

Wednesday, January 13, 2010

என்னைத் தேடி...


பெற்றோருக்கு நல்ல பிள்ளை;
உறவினர்க்கோ செல்லப் பிள்ளை!

பள்ளியில் முதன்மை மாணவன்;
கல்லூரியில் மற்றுமொரு மாணவன்!

சிலருக்கு முன்-மாதிரி யானவன்;
சிலருக்கு ஒரு மாதிரியாய் தெரிபவன்!

கணிதத்தில் புலி - குழு
விவாதத்தில் எலி!

அவனுக்கு பாசம் நிறைந்தவன்;
இவனுக்கோ பாசாங்கு செய்பவன்!

அவர்களுக்கு பிழை திருத்தம் செய்பவன்;
இவர்களுக்கோ பிழைக்கத் தெரியாதவன்!

ஒருவருக்கு விளையாட்டுப் பிள்ளை - மற்றும்
ஒருவருக்கு தீராத தொல்லை!

பலர் பார்வையில்,
பல தோற்றங்களில் - நான்!
பல இடங்களில்,
பல வேடங்களில் - நான்!
பட்டையைக்  கிளப்புகிறேன்!
பச்சோந்திக்கும் போட்டியாக!!

இருந்தும் இடையில் ஏனோ - மனம்,
"இவற்றுள் உண்மையான 'நான்' யார்?"
என்று தேடுகின்றது! - விடை
கிட்டாது என்று தெரிந்தும்!

என் நடிப்பும் தொடர்கின்றது...!
குறிப்பு: உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.