Wednesday, January 13, 2010

என்னைத் தேடி...


பெற்றோருக்கு நல்ல பிள்ளை;
உறவினர்க்கோ செல்லப் பிள்ளை!

பள்ளியில் முதன்மை மாணவன்;
கல்லூரியில் மற்றுமொரு மாணவன்!

சிலருக்கு முன்-மாதிரி யானவன்;
சிலருக்கு ஒரு மாதிரியாய் தெரிபவன்!

கணிதத்தில் புலி - குழு
விவாதத்தில் எலி!

அவனுக்கு பாசம் நிறைந்தவன்;
இவனுக்கோ பாசாங்கு செய்பவன்!

அவர்களுக்கு பிழை திருத்தம் செய்பவன்;
இவர்களுக்கோ பிழைக்கத் தெரியாதவன்!

ஒருவருக்கு விளையாட்டுப் பிள்ளை - மற்றும்
ஒருவருக்கு தீராத தொல்லை!

பலர் பார்வையில்,
பல தோற்றங்களில் - நான்!
பல இடங்களில்,
பல வேடங்களில் - நான்!
பட்டையைக்  கிளப்புகிறேன்!
பச்சோந்திக்கும் போட்டியாக!!

இருந்தும் இடையில் ஏனோ - மனம்,
"இவற்றுள் உண்மையான 'நான்' யார்?"
என்று தேடுகின்றது! - விடை
கிட்டாது என்று தெரிந்தும்!

என் நடிப்பும் தொடர்கின்றது...!
குறிப்பு: உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.